இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வருகிறது இணைய பாதுகாப்பு சட்டமூலம் : பெரும் ஆபத்து என்கிறது அமெரிக்கா

இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான சட்டமூலம் இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இணைய அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் சபாநாயகர் எதிர்வரும் 27ஆம் திகதி கையெழுத்திட இருந்த நிலையில், இன்;று கையெழுத்திட்டுள்ளார்.

இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் மீது கடந்த 23ம் திகதி இரண்டாவது முறையாக பாராளுமன்றில் விவாதம் நடைபெற்றது.

அடுத்த நாள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் பொருளாதார மீட்சியை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு எதிர்மறையான சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

இணையவழி பாதுகாப்பு உத்தேசச் சட்டம் இணையவழிக் குற்றங்களை ஒடுக்குவதற்கு உருவாக்கப்பட்டாலும் அது நாட்டின் ஜனநாயகத்தை ஒடுக்குவதாகவே அமைந்துள்ளதாக சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் குறிப்பிடுவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை முன்னேற்றகரமானதாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் அதேவேளை இந்த சீர்திருத்தங்கள் குறித்து மக்கள் தெளிவாக அறிவிக்கவேண்டும் என்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது மிகவும் அவசியமானது என தெரிவித்த அவர், சட்டமூலங்களை தாமதமாக அமுல்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இணைவழிப் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான விளங்கங்களை சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்னர் 70 சதவீதமான மக்கள் அறிந்திருக்கவில்லை என்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.