நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு-அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும்!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிவரையில் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து தொடர்ந்தும் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களால் இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.முன்னதாக இன்று காலை வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை காலை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.எவ்வாறிருப்பினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.பணிக்கான அடையாள அட்டையினை பயன்படுத்தி குறித்த சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியிருந்தனர்.கொழும்பு அலரி மாளிகையில் நேற்று முன்தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.அதன்படி அலரி மாளிகைக்கு முன்பாக உள்ள “மைனா கோ கம” போராட்ட களம் மற்றும் காலி முகத்திடலில் உள்ள ‘கோடா கோ கம’ போராட்டகளம் இரண்டையும் அவர்கள் தகர்த்தெறிந்திருந்தனர்.இதனையடுத்து கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்டபட பொதுமக்களும் இணைந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.இதனையடுத்து நிலைமையைக் கட்டுக்குள்கொண்டு வருவதற்காக நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.