இலங்கையில் நடந்த பாரிய குற்றச் சம்பவங்களுக்கு மூளையாக செயற்பட்டவரும் சர்ச்சைக்குரிய நபருமான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியினரும் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் செவ்வந்தி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து உயிரிழப்பதற்கு செவ்வந்தியே பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டிருந்தார்.
25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி இந்த சம்பவத்துக்கு உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
நீதிமன்றினுள்ள குற்றச் சம்பவம் நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களம், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் நேபாள பாதுகாப்புப் படையினரால் இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட குழுவில் கம்பஹா மற்றும் நுகேகொடையை சேர்ந்த 2 பேரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் தலைநகர் காத்மாண்டுவிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஏனைய குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இந்த நபர்களை நாளை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
“சிஐடி மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு என்பன கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நேபாளத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளது.
செவ்வந்தியை கைது செய்ய நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் அவர் மறைந்திருப்பதாகக் கூறப்படும் பல இடங்களில் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், எட்டு மாதங்களுக்குப் பின்னர் பொலிஸாரால் அவரை நேபாளத்தில் கைது செய்ய முடிந்ததுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.