பாதாள உலகத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் உதவி பரிசோதகரை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பத்மே மற்றும் நான்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகர்களுடன், அந்த அதிகாரி உறவைப் பேணி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், பாதாள உலக வலையமைப்பில், குறித்த அதிகாரியின் தொடர்பு எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்துக் குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி இரசாயனத்தைப் பயன்படுத்தி தானும் தனது குழுவினரும் சமீபத்தில் பதின்மூன்று கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை தயாரித்ததாக பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மே தெரிவித்துள்ளார்.
பத்மேவை தடுப்புக் காவலில் வைத்து நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த ஐஸ் போதைப்பொருளை தயாரிப்பதற்கு இரண்டு ஈரானிய நிபுணர்களின் ஆதரவு பெறப்பட்டுள்ளதாகவும் கெஹல்பத்தர பத்மே தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐஸ் போதைப்பொருளை நேரடியாக இறக்குமதி செய்வதை விட, அந்த இரசாயனங்களைப் பயன்படுத்தி அதனை தயாரிப்பது மிகவும் இலாபகரமானது என்பதால் அவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.