உணவுகளின் கட்டுப்பாட்டு விலை குறித்து நுகர்வோர் விடுத்துள்ள கோரிக்கை

வெதுப்பக உணவுகள் உள்ளிட்ட மற்றைய உணவுகளுக்குக் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட வேண்டுமென நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தையில் தற்போது முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் வெதுப்பகங்களில் முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளின் விலை குறைக்கப்பட மாட்டாது என இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நேற்று நள்ளிரவு (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டது.

அதன்படி, முட்டை அடங்கிய சோற்றுப்பொதியொன்றின் விலையை 40 ரூபாவினாலும், முட்டை ரொட்டி ஒன்றின் விலையை 30 ரூபாவினாலும் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று (30) முதல் குறித்த அளவில் விலைகளைக் குறைத்து நுகர்வோருக்கு உணவுகள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விலையைக் குறைக்காமல் உணவுகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு நுகர்வோர் அதிகார சபையினரின் உதவியைக் கோரவுள்ளதாகவும் சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் (Harshana Rukshan) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வெதுப்பக உணவுகள் உள்ளிட்ட உணவுகளுக்குக் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்பட வேண்டுமென நுகர்வோர் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.