நாமலை கதிரையில் அமர்த்த திரைமறைவில் சதி! மகிந்த மீது பகிரங்க குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்சவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் மக்கள் நினைக்கும் அளவிற்கு நெருங்கிய தொடர்புகள் எதுமில்லை என்றும் பசில் ராஜபக்சவுக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையேதான்  நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

பசிலை ஒரங்கட்டிவிட்டு நாமல் ராஜபக்சவை அரச தலைவர் கதிரையில் அமர்த்தும் நோக்கிலேயே பசிலுக்கு எதிரான போக்கை விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி விமல் மற்றும் கம்மன்பில ஆகிய இருவருக்கு பின்னணியில் இருந்து செயற்படுபவர் மகிந்த ராஜபக்சவே.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தமையை நினைத்து மகாநாயக்க தேரர்களும் பௌத்த பிக்குகளும் தலைகுணிவுக்கு உள்ளாகியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராக்க ஏன் எங்களை வலியுறுத்தினீர்கள் என மகாநாயக்க தேரர்களுக்கு தொலைபேசி மூலம் மக்கள் விமர்சனம் முன்வைக்கின்றனர். இதனால் தேரர்கள் பெரும் தலைகுனிவுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.