கடந்த மாதம் பொரளை சீவலியாபுரவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
புலத்கோஹுபிட்டிய, அரமங்கொடையைச் சேர்ந்த சந்தேக நபர், சிறப்பு அதிரடிப் படையினரால் (ளுவுகு) நடத்தப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் கடந்த மாதம் 7 ஆம் திகதி இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ‘குடு சத்து’ என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 23 வயது இளைஞன் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த ‘பகடயா’ என்று அழைக்கப்படும் சுரேஷ் மதுஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் சமீபத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் இருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள், டி-56 ரக துப்பாக்கியால் சுமார் 26 முறை சுட்டதாகவும், இதில் ஐந்து இளைஞர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த தாக்குதல் ‘குடு துமிந்த’ கும்பலால் நடத்தப்பட்டதாகவும், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘குடு சத்து’வின் சகோதரர் ஒருவர், சம்பவம் இடம்பெற்ற தினமான இரவு, சம்பவ இடத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், டுபாயில் தலைமறைவாக உள்ள இரு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.