கெஹல்பத்ர வழங்கிய வாக்குமூலம் : வீடியோ ஆதாரத்தில் சிக்கிய மஹிந்த கட்சியின் அரசியல்வாதி


மித்தெனியவில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் ரசாயனங்கள் பாணந்துறையைச் சேர்ந்த குடு நிலங்க என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என்று கெஹல்பத்தர பத்மே சிஐடியினருக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில் உள்ள கெஹல்பத்தர பத்மேவிடம் சிஐடி விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் இந்த விடயம் வெளிவந்துள்ளது.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினரால் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தொகை ரசாயனங்கள் சமீபத்தில் மித்தெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.


ஜனவரி 29 ஆம் திகதி மித்தெனியவிற்கு ரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறக்கப்படும் காட்சிகள் குற்றவாளிகளின் தொலைபேசிகளில் பதிவாகியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


தற்போது தலைமறைவாக உள்ள மற்றும் ரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மொட்டுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி என்பவரும் இந்த காட்சிகளில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவை பாணந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான நிலங்கவுக்குச் சொந்தமானது என்றும், அவரிடமிருந்து அவற்றை வாங்கியதாகவும் பத்மே விசாரணையின் போது கூறியுள்ளார்.