நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு (Ramanathan Archchuna) எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது இன்றையதினம் (22.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்றைய தினம் (21) இடம்பெற்ற போது அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காணொளியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்துள்ளதனால் அவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் தமிழீழத்துடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்டு அவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.