பிரித்தானியாவில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழருக்கு நடந்த அவலம்..!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அதிசொகுசு பயணிகள் பேருந்தில் தனக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக புலம்பெயர் தேசத்தில் இருந்து இலங்கை வந்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் வசிக்கும், யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்ட ஈழத்தமிழர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த குறித்த நபரை, பேருந்தின் நடத்துனர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்காமல், வேறு ஒரு இடத்தில் இறங்கியுள்ளார்.

இதனைக் கேட்டதற்கு பேருந்தின் நடத்துனரும், ஓட்டுனரும் குறித்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அவமரியாதைக்கு உட்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் கூறுகிறார்.

அதாவது, பேருந்து நீங்கள் சொல்லும் பாதை வழியாக செல்லாது எனவும், இதற்கு மேல் செல்ல வேண்டுமானால் முச்சக்கரவண்டி ஒன்றைப் பிடித்துச் செல்லுமாறும் கூறி அவரை நடு வீதியில் இறக்கிச் சென்றுள்ளனர்.

ஆனால், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பொழுது தான் இறங்க வேண்டிய இடத்தின் ஊடாகவே பேருந்து பயணிக்கும் எனத் தெரிவித்தே தனக்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

இதனை நம்பியே குறித்த பேருந்தில் தனது பயணத்தை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார்.

அவர் எமது ஐ.பி.சி தமிழ் யாழ். கலையகத்திற்கு நேரடியாக வந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"நான் பேருந்தின் பயணச்சீட்டினை முன்பதிவு செய்யும் பொழுது எந்த வழியின் ஊடாக பேருந்து பயணிக்கும், நான் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்து நிறுத்தப்படும் எனக் கூறியே பயணச்சீட்டு என்னிடம் வழங்கப்பட்டது. அதனை நம்பியே அதில் நான் எனது பயணத்தை தொடர்ந்தேன்.

ஆனால், கொழும்பில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இடத்தில் சொல்லப்பட்டது போல யாழ்ப்பாணத்தில் நடக்கவில்லை.

எனது வீடு அமைந்துள்ள பாதையின் வழியாக பேருந்து பயணிக்கவில்லை.

இதனை நான் சென்று நடத்துனரிடம் கேட்ட போது, அவர் பேருந்து நீங்கள் சொல்லும் பாதை வழியாக பயணிக்காது எனக் கூறினார்.

எனது வீடு உள்ள பாதையின் வழியாகவே பயணிக்கும் என பேருந்தின் பயணிசீட்டு வழங்குமிடத்தில் கூறியதைக் கூறினேன்.

இருப்பினும், என்னுடன் முரண்பட்ட ஓட்டுனரும், நடத்துடரும் என்னை இரவுப்பொழுதில், நடு வீதியில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.

நான் புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து வந்த ஒருவர், என்னிடம் பெறுமதியான ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி என்பவை இருந்தன.

அந்த நேரத்தில் நடு வீதியில் இறக்கி விடப்பட்ட எனக்கு எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் யார் பொறுப்பு.

நான் இந்த விடயத்தை தெரிவிக்க பேருந்தின் உரிமையாளருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தெரிவித்தேன், இருப்பினும் அவர் எந்த பதிலும் சொல்லாமல் எனது அழைப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

இது போன்ற பல முறைக்கேடுகள் குறிப்பாக யாழ்ப்பாணம் - கொழும்பு பேருந்துகளில் அடிக்கடி இடம்பெறுவதாக பலர் தெரிவிக்கின்றனர்.

இதை யாரும் தட்டிக் கேட்காததால் தான் இவர்கள் இன்னும் இது போன்ற தவறுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

உழைப்பிற்காக பொய்களைக் கூறி ஆட்களை பேருந்தில் ஏற்றுவது, பின்னர் பயணிகளின் நலன்களை பற்றி சிந்திப்பதில்லை.

உங்களை நம்பி பெறுமதியான ஆவணங்களுடன் பேருந்தில் ஏறும் மக்களை இவ்வாறு ஏமாற்றாதீர்கள்." என குறித்த ஈழத்தமிழர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.