கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் ஊழியர் சங்கத்தின் ஊழியர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில், நாடாளுமன்றத்திற்கு முன்பாக தற்போது இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் கலகத் தடுப்பு காவல்துறையினர் உள்ளிட்டோர் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மற்றும் கண்டி பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தீர்வுகோரல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளபட்டுள்ளது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென வீதிக்கு குறுக்கே சென்று அமர்ந்து கோஷம் எழுப்பியதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் அவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 4 மணி தொடக்கம் தொடர்ந்து 48 மணிநேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.