துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்த போது இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகி கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கே. சுஜீவா பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, கட்டண வார்டில் சிகிச்சை பெற்று, தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
மேலும் வசந்த சுரேந்திர பெரேரா என்ற கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுல கடுவெல நேற்றையதினம் 40 நிமிடங்கள் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கினார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் உட்பட 8 சந்தேக நபர்களும் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதன்போது, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை அத்துரிகிரிய பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
உயிரிழந்த கிளப் வசந்த மற்றும் பாடகி கே.சுஜீவாவின் கணவர் நயன வாசுல ஆகியோரின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் பொலிசார் இன்னும் கைது செய்யவில்லை என பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுல சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிகத் தகவல்களை வழங்கிய சட்டத்தரணி, பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுல, ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம், பொலிஸாரின் தேவைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி, நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு தமது கட்சிக்காரரான துலான் சஞ்சுல விரும்புவதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
சந்தேக நபர் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கும் போது நீதிமன்றில் உள்ள நிபந்தனைகள் குறித்து தெரிவித்த நீதவான், அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்க இணங்கினால் மதிய இடைவேளையின் பின்னர் வாக்குமூலத்தை வழங்க முடியும் என தெரிவித்தார்.
இதன்படி, சந்தேகநபர் நேற்று பிற்பகல் நீதவான் முன்னிலையில் சுமார் 40 நிமிடங்களுக்கு இரகசிய வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 சந்தேக நபர்களும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.