கிளப் வசந்தவின் இறுதிச் சடங்கு: மலர்ச்சாலைக்கு மர்ம நபர் மிரட்டல், அரசியல் பிரமுகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்


அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்  கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் அழைப்பினை மேற்கொண்ட  நபரின் தொலைபேசி இலக்கம் மலர் சாலையின் தொலைபேசியில் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைய தொலைபேசி ஆய்வு அறிக்கையினைப்  பெற்று  விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கிலப் வசந்த என்ற வசந்த சுரேந்திர பெரேராவுடன் தொடர்புடைய அமைச்சர்கள் தொடர்பிலும் பொலிஸாரினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளை கொண்ட விசேட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிளப் வசந்தவுடன் தொடர்புடைய பல அரசியல் பிரமுகர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இந்த நாட்களில் கிளப் வசந்தாவின் புகைப்படங்களை பயன்படுத்தி சில அமைச்சர்களை கொச்சைப்படுத்தும் வகையில் போலியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும்,

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, அத்துருகிரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட ‘கிளப் வசந்த’ பாராhளுமன்றத்தில் இருப்பவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தனது நண்பர்கள் என்று தெரிவித்திருந்ததாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன