வெள்ளத்தில் மூழ்கி ஒரே நாளில் பலியான உற்ற நண்பர்கள்..! : மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு


மோசமான வானிலையால் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது என்றும் ஒருவரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகும்,

1,973 பாதுகாப்பான மையங்களில் 7,639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் மழையுடனான வானிலையால் மாத்தறையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி உற்ற நண்பர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

20 வயதுடைய தரிந்து சம்பத் மற்றும் 17 வயதுடைய நவிந்து ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டாம் திகதி, தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய, அங்கு வசிப்பவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் போது, மாலை 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இருவரும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் சிறுவயதில் இருந்தே உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இருவரது உடல்களும் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேநேரம் காங்கேசந்துறையில் இருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று   வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.