இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து 12,319 வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களாக 76 ஆயிரத்து 977 பேர் தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், சிறப்பு அதிரடிப் படை முகாம்கள், சிறப்பு பொலிஸ் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் இன்றையதினம் மும்முரமாக தமது தபால் மூலம் வாக்குகளை செலுத்தினர்.
தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் இடம்பெற்றன.
இதேவேளை, இன்றையதினத்திற்கு மேலதிகமாக குறித்த இடங்களில் 6ஆம் திகதியும் தபால்மூலம் வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
குறித்த திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், எதிர்வரும், 11, 12ம் திகதிகளில், தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
--