சீன உளவுக்கப்பல் விவகாரம்..! அனுமதி வழங்கியதன் பின்னணியில் மகிந்த: வெளிச்சத்துக்கு வந்த தகவல்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய யுவான் வாங் 5 சீனக்கப்பல் நேற்று மாலை நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது.

குறித்தக் கப்பல் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்து சமுத்திரத்தின் வடமேல் கடற்பகுதியில் செய்மதி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் குறித்தக் கப்பல் நாட்டிற்கு வந்திருந்தது எனவும் ஆனால் எரிபொருள் நிரப்புவதற்காக என காரணம் கூறியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க - இந்திய எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 16ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுவான் வாங் -05 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட 10 அரசியல் கட்சி தலைவர்கள் அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

10 அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு யுவான் வாங் 5 கப்பலுக்கு அனுமதி கோரியுள்ளனர். இலங்கை துறைமுகத்தில் வருகை தரும் கப்பல்கள் கூட்டு பயிற்சி,மற்றும் இதர நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவின் யுத்த கப்பல்கள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தந்துள்ளன. பிரான்ஸ்,இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் யுத்த கப்பல்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளன.

ஆகவே சீன கண்காணிப்பு கப்பலின் வருகையினால் இந்தியாவின் இரகசிய தகவல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளமை முறையற்றது என்றும் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதியை தற்போது இரத்து செய்வது தவறு எனவும் சுட்டிக்காட்டி அனுமதி வழங்குமாறு கோரியுள்ளனர்.

மேலும், இலங்கை - சீன நல்லுறவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் இந்த கப்பல் விவகாரத்தினை கையாள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

சீன உளவுக் கப்பல் "யுவான் வாங் 5" நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன கப்பலுக்கு அனுமதிக்குமாறு மகிந்த தெரிவித்து 2 மணித்தியாலங்களுக்குள் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன தூதுவர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகிய இருவரும் கப்பல் விவகாரம் தொடர்பில் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

மறு நாள் காலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான சாகல ரத்நாயக்கவுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்ச குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்படாது விட்டால் இலங்கை பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

அதாவது, கப்பலை நாட்டிற்கு அனுமதிக்கவில்லை என்றால் சீனாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மூடப்படும், சீனாவினால் இலங்கை மீது தடை கொண்டு வரப்படும், போர்ட்சிட்டியில் இருந்து சீனா விலகிவிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன் காரணமாக சீன கப்பலுக்கு அனுமதிக்குமாறு மகிந்த தெரிவித்து 2 மணித்தியாலங்களுக்குள் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனக்கப்பலின் வருகைக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.

குறித்த கப்பல் இந்திய தேசியத்துக்கு பாதுக்காப்பு அச்சம் விளைவிக்கும் என்பதால் கரையோர பாதுகாப்பை பல மடங்காக இந்தியா அதிகரித்தது.

இதனையடுத்து, குறித்த சீனக் கப்பலின் வருகையை நிறுத்துமாறு சிறிலங்கா அரசிடம் இந்தியா வலியுறுத்தி வந்தது. இதற்க்கு ஆதரவாக அமெரிக்காவும் சீனக்கப்பலின் வருகை குறித்து கவலை வெளியிட்டது.

இதற்கமைய, சிறிலங்கா அரசு கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீன அரசாங்கத்திடம் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்து.

இதன் காரணமாக சீனாவின் உளவுக்கப்பல் சிறிலங்கா வருவதில் சவாலை எதிர்கொள்ள தொடங்கியது. இருப்பினும் எதுவித அனுமதியுமின்றி சிறிலங்காவின் சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்து இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்க அனுமதி கோரியது.

இதற்கிடையில், குறித்த கப்பலின் வருவகையை எதிர்க்கும் முகமாக இலங்கைக்கு இந்திய கடல் சார் கண்காணிப்பு விமானம் ஒன்றையும் வழங்கியது.

இதன் காரணமாக சீனக்கப்பல் இலங்கை வருவதில் மேலும் நெருக்கடியை எதிர்கொண்டது. எவ்வாறாயினும், சீனாவின் இராஜதந்திர நகர்வுகள் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கான அனுமதியை பெற்று கடந்த 16ம் திகதி காலை 8.10 மணியளவில் ஹம்பந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

சூடுபிடிக்கும் சீனக்கப்பல் விவகாரம்..! தயார் நிலையில் இந்தியா: ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா

சீனாவின் உளவு கப்பலை கண்காணிக்க அமெரிக்க அரசு உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

சீனாவின் உளவு கப்பல் அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதால் தான் இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ வரை துல்லியமாக ஆய்வு செய்யும் திறன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது,

இந்தியாவின் அணுமின்நிலையம் உட்பட செய்மதி ஏவுதளமான ஸ்ரீ ஹரிகோட்டா வரை பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, சிறிலங்காவில் கப்பல் நிற்கும் காலப்பகுதில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்பது குறித்து கண்காணிக்க உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியிருந்தது.

குறித்த அமெரிக்க எதிர்ப்பின் காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்த சீன கப்பல் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இது மட்டும் அல்லது, சீனாவை சீண்டும் முகமாக இரண்டு அமெரிக்க இராணுவ செயற்கைகோள்களை ஹம்பாந்தோட்டை வான்பரப்பிற்கு அனுப்பும் பணியை அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் மேற்கொண்டது.

இதனிடையே, சீனக் கப்பலின் விவகாரங்கள் குறித்து கண்காணிக்க இந்திய பெருங்கடலில் இந்தியாவின் தொழில்நுட்ப கப்பலான வீ.சி 11184 என்ற கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடற்படைக்கு சொந்தமான உலங்கு வானுர்திகள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான, இந்திய அமெரிக்க செயற்பாடுகளால் சீனக் கப்பல் பாரிய சவாலை முகம் கொடுக்க தொடங்கியது.

இவ்வாறு வலுத்த எதிர்ப்புக்கள் காரணமாக 19ம் திகதி இலங்கையை விட்டு வெளியேறுவதாக சீனக்கப்பல் தெரிவித்திருந்தாலும் 3 நாட்கள் தாமதமாக நேற்று (22) இலங்கையை விட்டு வெளியேறியுள்ளது.