சீனக்கப்பல் வருகைக்கு உறுதியளித்த சிறிலங்கா..! அடுத்த நகர்வுக்கு தயாராகும் இந்தியா

சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷின் யான் 6 கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியது.

இந்த தகவலை நேற்றைய தினம் வெளியிட்ட சிறிலங்கா கடற்படை, குறித்த கப்பல் 17 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் Shi Yan 6 எனும் சீன ஆய்வுக் கப்பல் நாரா நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், குறித்த ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீர் மாதிரிகளை எடுப்பதற்காக தமது நிறுவனம் கப்பலுடன் தொடர்புகொள்ளும் என நாரா நிறுவனம் தெரிவித்திருந்தது.

எனினும், Shi Yan 6 கப்பலுக்குள் பிரவேசிப்பதற்கு தமது ஆய்வாளர்கள் அனுமதி கோரிய போதிலும் நேற்று பிற்பகல் வரை அனுமதி கிடைக்கவில்லை என ருஹுணு பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொழில்நுட்ப பீடம் தெரிவித்துள்ளது.

Shi Yan 6 கப்பலானது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியும் இலங்கைக்கு வருகை தந்ததுடன், 10 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்தது.

கடந்த சில வருடங்களாக நாட்டிற்கு வருகை தந்துள்ள இவ்வாறான கப்பல்கள் தொடர்பில் ஆராய்ந்த போது, அவற்றில் பெரும்பாலானவை சீனாவை சேர்ந்த ஆய்வுக் கப்பல்களாகவே உள்ளன.

Shi Yan 6, Shi Yan 1, Shi Yan 3, Xiang Yang Hong 3, Xiang Yang Hong 18, Xiang Yang Hong 1, Xiang Yang Hong 6, Xiang Yang Hong 19 ஆகிய கப்பல்கள் இலங்கைக்கு இதுவரை வந்துள்ளன.

இந்த நிலையில் Shi Yan 6 கப்பல் இலங்கைக்கு வருகை தருவது தொடர்பில் கவனம் செலுத்தி வரும் இந்தியா, இராஜதந்திர மட்டத்தில் உரிய தரப்பினருக்கு அதனை அறிவித்துள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.