இலங்கை மீது கடும்கோபத்தில் சீனா : மகிழ்ச்சியில் இந்தியா

ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடை விதித்துள்ளமை குறித்து சீனா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனவரி மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிகப்பல்கள் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளமை குறித்தே சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் இவ்வாறான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு  இலங்கை ஒருவருடகால தடையை விதித்துள்ளது.

சீனாவின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பல் தென் இந்திய கடற்பரப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையிலேயே இலங்கை இந்த தடையை அறிவித்தது.

குறிப்பிட்ட கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு உரியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது அயலில் ஆராய்ச்சிகள் இடம்பெறுவது குறித்த பாதுகாப்பு கரிசனையை இந்தியா வெளியிட்ட நிலையிலேயே இலங்கை இந்த தடையை விதித்திருந்தது.

இந்திய ஊடகங்கள் இதனை சீனாவிற்கு விழுந்த அடி என குறிப்பிட்டிருந்தன .

சீன அதிகாரிகள் இலங்கையின் இந்த முடிவால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்,

இதேநேரம் இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார் கண்காணிப்பு கப்பலும், அபினவ் எனப்படும் அதிவேக கண்காணிப்பு கப்பலும் வந்துள்ளன.

இந்த கப்பல்கள் நேற்று முன்தினம் வந்தடைந்துள்ளன. இவை மார்ச் முதலாம் திகதி வரை காலியில் தரித்திருக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, மார்ச் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன.

இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தீயணைப்பு, சேதங்களைக் கட்டுப்படுத்துதல், சமுத்திர பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளன.