கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கைக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
ஜோர்ஜியாவின் ட்பிலிஸி நகரில் 2 - 5 ஆம் திகதி வரை நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்வதற்காக ஜோர்ஜியா சென்றிருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர், அங்கு பல்வேறு உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புக்களை நடத்திவருகின்றனர்.
அதன் ஓரங்கமாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும், சீனாவின் பிரதி நிதியமைச்சர் லியோ மின்னுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம், கடன்மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீன பிரதி நிதியமைச்சர் லியோ மின் உறுதியளித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் உதவுவதில் சீனா கொண்டிருக்கும் வலுவான நிலைப்பாட்டையும் அவர் மீளுறுதிப்படுத்தினார்.
அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித்தலைவர் யிங்மிங் யாங்குடனான சந்திப்பின்போது 2024 - 2028 ஆம் ஆண்டு வரையான புதிய ஒத்துழைப்பு செயற்திட்டம் குறித்தும், நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஆசிய அபிவிருத்தியின் ஒத்துழைப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு பொருளாதாரத்திலும், கடன்மறுசீரமைப்பு செயன்முறையிலும் அடையப்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.