சீனா - சிறிலங்கா உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்திய உரக்கப்பல் விவகாரம் - சிறிலங்காவின் உடனடித் தீர்மானம்!

சீனா சிறிலங்கா இடையேயான உறவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன உரக்கப்பல் விவகாரம் தொடர்பில் சிறிலங்கா விவசாய அமைச்சு முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. 

அந்த வகையில், சீன உரக்கப்பல் தொடர்பான முரண்பாடுகளை, இரு நாடுகளினதும் நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாள்வதற்காக, வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மற்றும் சிறிலங்காவிற்கான சீன தூதுவருடன் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

பரிந்துரைக்கப்பட்ட விவசாய இரசாயனங்கள் இல்லாத அழிவை ஏற்படுத்தக்கூடிய பக்டீரியா இருக்கின்ற உரங்களுடன் சீன கப்பல் சிறிலங்காவிற்குள் நுழைய முயற்சி செய்ததாக, சீனாவின் கிண்டாவே சீவின் பயோடெக் நிறுவனத்தை இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்குமாறு கணக்காய்வாளர் நாயகம் அரசாங்கத்திடம் பரிந்துரைத்திருந்தார்.

இதேவேளை இந்த உரம் நாட்டிற்குள் நுழைந்திருந்தால் இலங்கையில் பொருளாதார பெறுமதி உள்ள பயிர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்காக சிறிலங்காவிற்கான தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக சிறிலங்கா அறிவித்துள்ளது.

எனவே சேதன பசளை பரிமாற்றம் தொடர்பான விடயங்களில் உரிய வகையில் செயற்பட்டிருக்காமையே இதற்கான பிரதான காரணமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.