பாதாள உலக குழுவின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிங்புர தேவகே சமிது திவங்க மற்றும் அதே முகவரியைச் சேர்ந்த 48 வயதான சேசத்புர தேவகே சமந்தி ஆவர்.
கைது செய்யப்பட்டவர்கள் இந்தக் குற்றத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாயார் மற்றும் தம்பி என்பதும் தெரியவந்துள்ளது.
ஒரு கொலை குறித்து அறிந்திருந்தும், அது குறித்த தகவலை மறைத்த, குற்றத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தக் குற்றத்துடன் தொடர்புடையதாக இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேநேரம் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம, ஜெயா மாவத்தையைச் சேர்ந்த 25 வயதான இஷாரா செவ்வந்தி என்ற பெண்,தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கொலை நடந்து ஐந்து நாட்கள் கடந்தும், இதுவரை மூளையாக இருந்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
எனினும், விசாரணை அதிகாரிகள் அவரைப் பற்றிய பல தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, நேற்று, சிறப்புப் படையினர் சந்தேகத்திற்குரிய பெண் மறைந்திருந்த தெஹிவளையில் உள்ள ஒரு விடுதியை சோதனையிட்டுள்ளனர்.
இதேநேரம் கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு, பாதாள உலகக்குழுவின் தலைவர் ஒருவர் 15 மில்லியன் ரூபா பணம் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவருக்கு இரண்டு இலட்சம் ரூபா பணம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக கைது செய்யப்பட்ட இது போன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் பெரும்பாலானோருக்கு கொலையின் பின் வாக்குறுதியளித்த பணத்தை ஒப்பந்தக்கார்கள் வழங்குவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பொய்யான வாக்குறுதிகளால் கவரப்பட்டு பாரிய குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள், இறுதியில் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவவின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பேஸ்புக் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டார் என்பதையும் பொலிஸ் ஊடக பேச்சாளர் வெளிப்படுத்தியுள்ளார்.