இலங்கையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம் : வெளியான அதிர்ச்சி தகவல்


இலங்கையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர் பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய், மரக்கறிகள் உட்பட அன்றாடம் உண்ணும் பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வியாபாரிகள் இரசாயனப் பொருட்களைச் சேர்ப்பதால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பட்டர், கேக் உட்பட சந்தையில் விற்பனை செய்யப்படும் பல வகையான கேக்கில் பட்டர் தவிர முட்டைகள் எதுவும் இல்லை என பொது சுகாதார பரிசோதகர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தொடர்பாக பொறுப்புள்ள தரப்பினரிடையே உடனடி மற்றும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், இன்னும் 5-6 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் தொற்றா நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளார்.


இதேநேரம் பண்டிகைக் காலத்தில் ஒன்பது வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை மிகவும் நியாயமாக விலையில் மக்கள் கொள்வனவு செய்யும் வகையில் ஒன்பது அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோதுமை மா 189 முதல் 208 ரூபா வரையிலும், பருப்பு கிலோ 312 முதல் 327 ரூபா என விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோ 174 முதல் 214 ரூபா வரையிலும், சீன வெங்காயம் ஒரு கிலோ 298 முதல் 328 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

அத்துடன், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 349 முதல் 384 ரூபா வரையும், உலர் நெத்தலி கிலோ ஒன்று 869 முதல் 955 ரூபா வரையிலும், காய்ந்த மிளகாய் 818 ரூபா முதல் 859 வரையும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.