ராஜபக்சக்கள் மற்றும் பிள்ளையான் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்: வலியுறுத்தும் தமிழ் எம்பி

ராஜபக்சக்கள் மற்றும் பிள்ளையான் போன்றவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் நேற்று (5) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரிட்டன் ஊடகமான சனல் 4 ஊடாக வெளியான தகவல் சாதாரணமான விடயமல்ல.

அதன் சூத்திரதாரியாக கிழக்கு மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவருமான பிள்ளையான் இருக்கின்றார்.

இவர் தற்போது இராஜாங்க அமைச்சுப் பதவியை வகிக்கின்றார்.

பிள்ளையான் சிறி லங்கா இராணுவத்துடன் இணைந்து 2009 ஆம் ஆண்டு வரை தமிழர்கள் பலர் கொல்லப்படுவதற்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை அரங்கேற்றி அந்தப் பழியை முஸ்லிம் மக்கள் மீது ராஜபக்சக்கள் சுமத்தியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்காற்றிய முஸ்லிம் சமூகத்தை ஒரே நாளில் குற்றவாளியாக்கி, அவர்களின் பொருளாதாரத்தை ராஜபக்சக்கள் அழித்துள்ளனர்.

சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக அவர்கள் திருப்பியிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் அதிபர் தேர்தலில் எவ்வாறு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது யாவரும் அறிந்த ஒன்றே.

சிங்கள மக்கள் ஒன்றை நிதானமாகச் சிந்திக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ள முடியாத இராணுவத்தினர் சிங்கள மக்கள், பிக்குகள் பயணித்த பேருந்தில் குண்டு வைத்தனர்.

இதன் மூலம் சிங்கள மக்களைத் தமிழ் மக்களுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் கோபப்பட வைத்து ஒரு இன அழிப்பை மேற்கொள்வதற்கு ராஜபக்சக்கள் சதி செய்தனர்.

இதனை சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாக மட்டுமே வெளிக்கொண்டு வர முடியும்.

இந்நிலையில், பிள்ளையான் மற்றும் ராஜபக்சக்கள் போன்றவர்கள்,  உடனடியாகக் கைதுசெய்யப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராகச் சர்தேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.”  என்றார்.