வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம்: களமிறங்கும் ஐ.நா


மோசடியாக சொத்துக்களை ஈட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் தெற்காசிய பிராந்திய பிரதிநிதி மார்கோ டீக்சீராவுக்கும், அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு ஈட்டுப்பட்ட பணத்தை வெளிநாடுகளில் வைப்பு செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்பது தொடர்பில் உலக வங்கியின் சார்பில் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் செயற்படுகிறது.

எதிர்வரும் 15ஆம் திகதி புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் அவ்வாறானவர்கள் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.