ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதேவேளை, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வகையிலான சம்பள அதிகரிப்புக்கள் மற்றும் மானியங்கள் தற்போதைக்கு வழங்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த சம்பள அதிகரிப்புக்களும், மானியங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதியின் பின்னரே வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் நீண்ட கால அடிப்படையில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு தடையில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீர்க் கட்டணத்தைக் குறைப்பதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கடந்த 21ம் திகதி முதல் நீர்க் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர்க் கட்டணம் 7 வீதமும், வைத்தியசாலைகளுக்கான நீர்க் கட்டணம் 4.5வீதமும், அரச பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்க்கட்டணம் 6.3 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.