அரிசியில் காட்மியம், ஈயம் போன்ற கனரக உலோகங்கள் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆனந்த ஜயலால் தெரிவித்தார்.
இதன் காரணமாக அதிகளவான சிறுநீரக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உணவு தொடர்பில் சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்கள் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்த அவர்,
நாளாந்தம் 200 கிராம் அரிசியை உணவாக மூன்று வேளை உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் பிற நோய்களை ஏற்படுத்தும்.
உணவு சில நோய்களை குணப்படுத்தும் என சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.
ஒரு குறிப்பிட்ட நோயை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என்று கூறினால் முறையான அறிவியல் ஆய்வு நடத்தி, நாட்டின் முக்கிய உணவு அதிகாரியான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும், ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு, ஆற்றல் போன்றவை உணவில் இருந்து பெறப்படுவதாகவும், நோய்களைக் குணப்படுத்த உணவல்ல மருந்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஒருவர் வாரத்திற்கு 2.8 கிலோ அரிசி, 3.2 கிலோ கோதுமை மா, 1.2 கிலோ ரொட்டிமா மற்றும் 2.4 கிலோ சீனி சாப்பிடுகிறார், இதனால் உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.
உணவை பன்முகப்படுத்த வேண்டும், இல்லை என்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            