புதிய முதலீட்டு வலயங்களின் அபிவிருத்திக்கு அமைச்சரவை அனுமதி

புதிய முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்கு அதிபரினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதானது குறித்த முன்மொழிவுகளில் ஒன்றாகும்.

மாங்குளம், பரந்தன் இரசாயன நிறுவன வளாகம் மற்றும் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன வளாகங்களில் புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவது மற்றுமொரு ஆலோசனையாகும்.

இதேவேளை, இரணைவில மற்றும் திருகோணமலையில் புதிய முதலீட்டு வலயங்களை அறிமுகப்படுத்துவதற்கும் அதிபர் முன்மொழிந்துள்ளார்.

மேலும் பிங்கிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயங்களை மேலும் விரிவாக்கம் செய்வதும் இதன் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, உத்தேச பொருளாதார வலயங்களை அமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, பொருத்தமான அரச - தனியார் பங்குடமை மாதிரியின் அடிப்படையில் மேற்படி முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.