தென்னிலங்கையில் தொடரும் குழப்ப நிலை: பௌத்த பிக்கு சுட்டுக்கொலை

கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பிக்கு 43 வயதுடைய கலபாலுவாவே தம்மரதன தேரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காரில் வந்த நால்வரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்களை பொலிஸார் என்றும் போதைப்பொருள் சோதனைக்காக விகாரைக்கு வந்ததாகக் கூறிய சந்தேகநபர்கள் பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற வாகனம் அருகிலிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளதுடன் அதில் CAO - 5345 எனும் இலக்கத்தகடு பொறிக்கப்பட்டிருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த வாகனம் மாலம்பே பிரதேசத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸாரின் விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை தங்காலையில் நேற்றையதினம் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.