புத்தரா... பிக்குகளா... ஆக்கிரமிப்பின் வடிவம்

உலக அளவில் புத்தர் ஒரு மகான். இந்த உலகத்திற்கு மிக உன்னதமான பலவிடயங்களை போதித்த துறவி.  ஆனால் சிறிலங்காவை பொறுத்தவரை மட்டும் புத்தர் ஒரு ஆக்கிரமிப்பின் வடிவம்.

நிலத்தாசையும் இனத்துவேசமும் அளவுக்கு அதிகமாகவே நிரம்பப்பெற்ற ஒருவராகவே இருந்து வருகிறார்.

ஆசையையும் போகத்தையும் விட்டொழித்து நாடு நகரம் மக்களென அனைத்தையும் துறந்த புத்தருக்கு எப்படி நிலத்தாசை பிடித்தது.

புத்தருக்கு நாடுமுழுவதும் சொத்து சேர்க்கும் பிக்குகளின் மனநிலையே இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையாகிப்போய் இருக்கிறது.   

கடந்த நாட்களில் விகாரை கட்டுவதை தடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பகுதியில் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அந்த பிக்குகள் சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம். வரலாற்று சான்றுகளை கிளறுகின்ற சம்பந்தன், புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு இயல்பாகவே புத்தரா பிக்குகளா ஆக்கிரமிப்பின் வடிவம் என்ற கேள்விக்கான விடை கிடைத்திருக்கும்.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் இடப்பக்கமாகவுள்ள, பெரியகுளம் சந்தியை அண்மித்துள்ள, தொல்லியல் திணைக்களத்தினால் தொல்லியலுக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு அருகில், பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விடயத்தில் அங்கிருக்கும் பௌத்த தரப்பு “நாங்கள் தொல்லியல் காணிக்குள் விகாரை அமைக்கவில்லை. அதற்கு அண்மையில் உள்ள புத்தசாசன அமைச்சினால் பௌத்த விகாரைக்காக வழங்கியுள்ள காணியில் தான் பௌத்த விகாரை அமைக்கப் போகின்றோம்.” என்று சொல்லுகிறது.

அதேநேரம் அங்கிருக்கும் தமிழர்கள் “ பௌத்தர்களே இல்லாத இடத்தில் யாருக்காக பௌத்த விகாரை? காலம் காலமாக இப்பகுதியிலும், இப்பகுதியைச் சுற்றிய பகுதியிலும் தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றார்கள் “ இப்படி சொல்லுகிறார்கள்.

ஆனால் அரச தரப்போ “ எந்த விடயத்திற்கும் மக்கள் எதிர்ப்பு இல்லாவிட்டால் அந்த விடயத்தை நாங்கள் எப்படி எதிர்ப்பது? எதிர்ப்பு தொடர்பான ஆவணங்கள் எவையும் கிடைக்கவில்லை.” என்று சொல்லி நழுவிக்கொள்ளுகிறது.

பாரம்பரியமாக தமிழர்கள் வாழும் நிலமொன்றில் பௌத்த விகாரையின் தேவை என்ன ? இது இந்த நாட்டை எங்கு கொண்டு நிறுத்தப்போகிறது.

சிறிலங்காவின் தொல்லியல் கட்டளைச்சட்டப்படி தொல்பொருள் சின்னங்கள் இருக்கின்ற 100 மீற்றர் பகுதியும், அதிலிருந்து 400 மீற்றர் வரையான பகுதியிலும் எவ்வித கட்டுமானங்களும் மேற்கொள்ள முடியாது.

அவ்வாறு மேற்கொள்பவர்களுக்கு எதிராக 50000 ரூபா தொடக்கம் 250000 ரூபா வரையான தண்டப்பணமும் சிறைத்தண்டனையும் விதிக்கலாம்.

அத்துடன் இனங்களுக்கிடையேயான வன்முறைகளை தோற்றுவிக்கும் முகமாக செயற்படுபவர்களுக்கு எதிராக ICCPR சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆக அத்துமீறி தமிழர் தாயக பிரதேசங்களில் அமைக்கப்படும் கட்டுமானங்களை அகற்றவேண்டிய தேவையும் அதற்கு எதிராக போராட வேண்டியதும் ஒவ்வொரு தமிழருக்கும் உரிய கடமையாக மாறிக்கொண்டிருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

அதிகளவான சட்டத்தரணிகளைக்கொண்ட முன்னணி தரப்பு இதனை சட்டரீதியாக அணுகுமா? அல்லது விளையாட்டுப் பிள்ளைகளைப் போல வீதியில் இருந்து காவல்துறையுடன் உப்புமூட்டை விளையாட்டைத் தான் விளையாடப்போகிறதா ?

அல்லது ரணிலுக்காக , சிராணிக்காக , ரஞ்சன் ராமநாயக்கவிற்காக நீதிமன்றப்படியேறி எல்லோரையுமே கலங்கடித்த இலங்கையின் மிகச்சிறந்த தமிழ் சட்டத்தரணி என மார்தட்டுபவர் நீதிமன்றத்தை நாடுவாரா?

அல்லது இன நல்லிணக்கம் பேசி நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவாரா? பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.