இந்தியாவின் (India) மும்பையிலிருந்து (Mumbai) புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலையடுத்து, குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த விமானம் இன்று (24.10.2024) காலை 15:15 மணிக்கு வரவிருந்ததாகவும், தரையிறங்குவதற்கு முன்பு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மும்பையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸின் UK-131 விமானம் இன்று பிற்பகல் 02.56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அதன்படி, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெறிமுறைக்கு ஏற்ப அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
107 பயணிகள், ஒரு கைக்குழந்தை மற்றும் 8 பணியாளர்களுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து பயணிகள் முனைய கட்டிடத்திற்கு விரைவாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், 24 மணி நேரத்திற்குள் 85 விமானங்களுக்கு புதிய அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.