தங்காலைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேரின் உடல்கள்.. : பெரும் சோகத்தில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட மக்கள்



பதுளை எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த அனைத்து ஊழியர்களின் உடலங்களும் தற்போது தங்காலை நகர சபைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவர்களின் உடலங்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 10 மணி முதல் உடலங்கள் நகர சபையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விபத்தில் தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே.ரூபசிங்க மற்றும் 12 ஊழியர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 15 பேரும் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பேருந்து விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்துகளில் பேருந்து சாரதிகளின் கவனக்குறைவே முதன்மைக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேநேரம் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனது பேஸ்புக் பக்கத்தில்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 அதில்,

"2025 செப்டம்பர் 4 இரவு எல்ல-வெல்லவாய வீதியில் நடந்த பேருந்து விபத்து குறித்து அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தங்காலையில் இருந்து சுற்றுலாவுக்குச் சென்று திரும்பியவர்களில், தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உள்ளிட்ட பலர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து முழு நாட்டு மக்களையும், குறிப்பாக தங்காலை பகுதி மக்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் உயிர்களைக் காப்பாற்ற ஆபத்தான பாறைகளில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்ட எல்ல பிரதேசவாசிகள், பொலிஸ், இராணுவம், விமானப்படை, தீயணைப்பு படை, மற்றும் வைத்திய குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

 

பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ மற்றும் மருத்துவ ஊழியர்களின் அர்ப்பணிப்பையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். இந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். தங்காலை நகர சபை ஊழியர்களின் குடும்பங்கள் உட்பட அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் மற்றும் மீட்புப் பணிகளின்போது பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.