ஆண்டின் முதல் அமர்விலேயே பெரும் சர்ச்சை : அதிரடியாக விலகிய எம்.பி.

வற் வரித் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றனர்.

இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமானது.

இந்தநிலையில், அரசாங்கத்தின் முறையற்ற வரிக் கொள்கை காரணமாக, நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடையில் சபை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதன்போது, தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன் தனது மனசாட்சி படி தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த முடிவை எடுப்பதால் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவருடைய பதவி விலலைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்துக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்.

நயன வாசலதிலக, 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினூடாக போட்டியிட்டு  31,307 விருப்பு வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமசதாஸ,

கௌரவ அமைச்சர் அவர்கள் வங்குரோத்து அடைந்த இலங்கையை ஒப்பீடு செய்கின்றார். துரித பொருளாதார வளர்ச்சியை கொண்ட இந்தியாவுடன் ஒப்பீடு செய்கின்றார். அந்த ஒப்பீட்டு ரீதியில் பார்க்கின்ற போது இலங்கையின் நிலைமை மற்றும் இந்தியாவின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது.   இந்தியா  ரொக்கெற்  அனுப்பியிருக்கிறதாம் சந்திரனுக்கு. ராஜபக்சர்கள் நாட்டை வங்குரோத்து அடைய ரொக்கெற் அனுப்பியிருந்தார்கள். அந்த ராக்கெட்டில் வங்குரோத்து அடைந்த நாடு இது. இது தான் உண்மை என அவர்  தெரிவித்துள்ளார்.