கருணாவின் காணியில் உயிரிழந்த இருவர்: வெளியான காரணம்

யானைக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல ஈச்சயடி பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றிலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பண்ணை தேவநாயகம் செந்தூரன் என்பவரால் நடத்தப்பட்டு வந்ததாகவும், பண்ணையில் அனுமதியின்றி மின்கம்பிகள் பதித்ததால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொது மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் கிரான், புலி பாய்ந்த கல் பிரதேசத்தை சேர்ந்த ஆறுமுகம் யோகநாதன் என்னும் 51 வயது நபரும், விநாயகமூர்த்தி சுதர்சன் என்னும் 21 வயது இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இது போலவே சென்ற வருடமும் அந்த பண்ணைக்குள் ஏற்பட்ட மின் விபத்தில் ஒருவர் உயிரிழந்திருந்ததும், அதற்கு வாழைச்சேனை காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொது மக்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த காணியானது, விநாயாகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுடைய காணி என்றும், அவர் அதனை தன்னுடைய மருமகன் பேரில் குத்தகைக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.