தனியார் துறைக்கு அடிப்படை சம்பளம் 30 ஆயிரமாக அதிகரிக்கும் : தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700ஆக அதிகரிக்க இணக்கம்

தனியார் துறை சேவையாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்படும். தனியார் துறையில் அடிப்படை சம்பளம் 21 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,
 

வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும்  தனியார் சேவையாளர்களின் சம்பளம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர் தரப்பினர் தமது அரசியல் இலாபத்துக்காக இவ்விடயத்தில் விமர்சனங்களை மாத்திரமே முன்வைக்கிறார்கள்.
 
  கடந்த காலங்களில் நாங்கள் தொழிலாளர்களின்  உரிமைகளுக்காகவும், சம்பள அதிகரிப்புக்காகவும்  போராடினோம்.  கடந்த காலங்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்களுக்கு அமைவாகவே சம்பள அதிகரிப்புக்கான யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

நாட்டில் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தனியார் துறையில் அங்கம் வகிக்கிறார்கள்.
இவர்களில் 60 சதவீதமானோரின் அடிப்படை சம்பளம் 21 ஆயிரம் ரூபாவாக காணப்படுகிறது.
தற்போதைய வாழ்க்கைச் செலவுகளுக்கு அமைய இந்த தொகை போதுமானதாக அமையாது.



ஆகவே இவ்விடயம் குறித்து  தனியார் சேவை வழங்குநர்கள் மற்றும் முதலாளிமார்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை 27 ஆயிரம் ரூபாவாகவும், 2026. ஜனவரி மாதம் 30  ஆயிரம் ரூபாவாகவும்  அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைவாக தனியார்  துறை தொழிலாளர்களின் அடிப்படை சம்பள சட்டம் திருத்தம் செய்யப்படும்.

 2024 மே 01 ஆம் திகதி மே  தினத்தன்று மலையகத்துக்கு சென்று அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  1700 ரூபா சம்பளம் வழங்குவதாக பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.  
குறிப்பிட்டதை போன்று சம்பளம் அதிகரிக்கப்படவில்லை..  ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து  இவ்விடயம் குறித்து   முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். இதற்கமைய 1700 சம்பளம் வழங்க இணக்கப்பாடு  எட்டப்பட்டுள்ளது என்றார்.