ஆஷஸை மீண்டும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

மெல்பேர்ன்: ஸ்காட் போலாந்தின் அபாரா பந்துவீச்சால் ஆஷஸ் கோப்பையை மீண்டும் கைப்பற்றி அசத்தியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

உலகின் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த டிசம்பர் 8ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இங்கிலாந்து அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் படு தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு வாழ்வா ? சாவா? போட்டியான 3வது டெஸ்ட் கடந்த டிசம்பர் 26ம் தேதி தொடங்கியது. இதில் அதிக ஸ்கோர் அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி மீண்டும் ஏமாற்றத்தையே சந்தித்தது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் கைவிட கேப்டன் ஜோ ரூட் மட்டுமே அரைசதம் அடித்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு சொந்த மண்ணில் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்கள் மார்கஸ் ஹாரிஸ் 76 ரன்களும், டேவிட் வார்னர் 38 ரன்களும் விளாசி அசத்தினர். ஆனால் அதன் பின்னர் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் அந்த அணி 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எனினும் இங்கிலாந்தை விட 82 ரன்கள் முன்னிலை வகித்தது.

2வது இன்னிங்ஸிலாவது அதிக ஸ்கோர் அடித்தால் தான் ஆட்டத்தை டிரா செய்ய முடியும் என்ற நோக்கில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்காட் போலாந்து வீசிய நான்கே ஓவரில் இங்கிலாந்தின் ஒட்டுமொத்த டாப் ஆர்டரும் சரிந்தது. இந்த முறை கேப்டன் ஜோ ரூட்டும் கைவிட்டதால் 68 ரன்களுக்கு எல்லாம் அந்த அணி ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 வெற்றியுடன் கைப்பற்றியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் வசம் தான் ஆஷஸ் கோப்பை உள்ளது குறிப்பிடத்தக்கது.

2வது இன்னிங்ஸில் அபாரமாக செயல்பட்ட ஸ்காட் போலாந்துக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 4 ஓவர்கள் வீசிய அவர் 6 விக்கெட்களை கைப்பற்றினார். வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த தொடரில் இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளதால் ஆஸ்திரேலிய அணியை எப்படியாவது பழிவாங்கிவிட இங்கிலாந்து முணைப்புடன் உள்ளது.