அஸ்வெசும : மாவட்ட செயலாளர்கள், அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அஸ்வெசும வேலைத்திட்டத்தை மந்தகதியில் முன்னெடுக்கும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க எச்சரித்துள்ளார்.

நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அஸ்வெசும வேலைத்திட்டத்தை துரிதமாக முன்னெடுத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் எதிர்பார்ப்பானது, சில தரப்பினரால் கால தாமதப்படுத்தப்படுவது பொறுத்தமற்றது என்பதால் ஜனாதிபதியின் செயலாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சமன் ஏக்கநாயக்க இவ்விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

  அஸ்வெசும கிடைக்கப்பெறாதவர்களுக்கு மேன்முறையீடு செய்தல், புதிதாக விண்ணப்பித்தல் தொடர்பில் மீளாய்வு செய்தல் என்பனவும் இதன் போது முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஒரு மாவட்ட செயலாளர் தனக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளில் 100 வீதத்தை நிறைவு செய்துள்ள போதிலும், மற்றொருவர் 20 வீதத்தை மாத்திரம நிறைவு செய்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. எனவே இனி இவ்வாறு இடம்பெறக் கூடாது என்பதையும் சமன் ஏக்கநாயக்க கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

--