எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர் லோஷன் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியினால் இன்று (07.10.2024) கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பில் நடைபெற்ற அரகலய போராட்டத்தில் தமிழ் மக்களின் சார்பில் லோஷன் பங்களித்ததாகவும் மனோ கணேசன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புதிய அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்தருந்தது.
மேல் மாகாணத்தில் கொழும்பு (Colombo), கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் சப்ரகமுவ மாகாணத்தில் (Sabaragamuwa Province ) இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் ஊவாவில் பதுளை மாவட்டத்திலும் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.