கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ள நடிகர் ஜெஹான் அப்புஹாமி - தப்பிச் செல்ல இடமளித்த அதிகாரிகள் யார்?


அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நடிகர் ஜெஹான் அப்புஹாமியை கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் நேற்று மதியம் வரை கிடைக்கவில்லையெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் அண்மையில் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து ஜெஹான் அப்புஹாமியின் கடவுச்சீட்டை தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 18 ஆம் திகதி ஒழுங்கு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை குழு ஒன்று ஜெஹான் அப்புஹாமியை கைது செய்ததக தெரிவித்தனர்.

மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் அவரை கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அழைத்து செல்லத் தயாராக இருந்த பேருந்தில் ஏற்றுவதற்காக மற்றுமொரு காவல்துறை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் காவல்துறை பேருந்தை பரிசோதித்த போது ஜெஹான் அப்புஹாமி பேருந்தில் இருக்கவில்லை. பேருந்தில் ஏற்றுவதற்காக ஒப்படைக்கப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர் தப்பிச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் அவர் தப்பிச் சென்றரா அல்லது தப்பிச் செல்ல இடமளிக்கப்பட்டதா என்பதை அறிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் டயஸின் உத்தரவுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எவ்வாறாயினும் தப்பிச் செல்ல இடமளித்த அதிகாரிகள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் டயஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜெஹான் அப்புஹாமி காவல்துறையால் எந்த சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறையில் இருப்பதாகவும் அறிவிக்கவில்லை எனவும் அவர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.