சோமரத்ன ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு - யாழில் மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்


சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுமாக இருந்தால் அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்

மனித உரிமை ஆணைக்குழுவின் கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷானஹனீபா மற்றும் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் உட்பட குழுவினர் நேற்று திங்கட்கிழமை காலை செம்மணி பகுதியில் புதைகுழிகளை நேரில் பார்வையிட்டு அகழ்வுப் பணிகளை ஆய்வு செய்தனர்.



யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதை குழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள நிலையில் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு ஏதாவது உயிர்அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் இலங்கை மனித உரிமைகள் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பியபோதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்

இதுதொடர்பில் ஊடகவியலாளர்களிடம்  கருத்து வெளியிட்ட அவர்கள்,
இது தொடர்பாக நாமும் பத்திரிகை ஊடாக அறிந்தோம். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படுமாக இருந்தால் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை மனித உரிமை ஆணைக்குழுவாக நாம் செய்வோம்.
அகழ்வுப் பணிகள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்பிலும் தகவல் பெற்றுள்ளோம். அவை தொடர்பிலும் ஆராய்வோம்.
செம்மணி மனித அகழ்வு பணிகளில் ஈடுபடுபவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.நாங்கள் கொழும்புக்கு போன பிறகு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரோடு எமது அவதானங்கள் குறித்துக லந்து பேசி இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார இறுதிக்குள் அவதானிப்பு குறித்து ஒரு பொதுவான அறிக்கையை வெளியிடுவோம்.

அந்த அறிக்கையில் இதுவரை நடந்த விடயங்கள் பற்றிய திருப்தியும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் எங்கள்பரிந்துரைகளை முன்வைப்போம்.
மேலும், 1996, 97 ஆம் ஆண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விசாரணைகள் குறித்து 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை மனித உரிமை ஆணைக்குழு அதிகாரப்பூர்வ இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.