இராணுவ முகாம்களை விடுவிப்பதில் வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது என நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ முகாமொன்று விடுவிக்கப்பட்டமை குறித்து இன்று (20) தனது எக்ஸ்(X) பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் இராணுவ முகாம் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு காணிகளை வழங்குவதற்காக இன்னும் பல இராணுவ முகாம்கள் எதிர்வரும் மாதங்களில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு தரப்பினருடன் கலந்தாலோசித்து காணிகளை விடுவிப்பது பிரச்சினையல்ல என்றாலும், தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யும் வகையில் அதனை செய்யக்கூடாது.
30 ஆண்டுகால பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய இலங்கை இன்று ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திரத்தை அனுபவிக்கிறது.
எனவே வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது.“ என அவர் தெரிவித்துள்ளார்.