பிரபல பாதாள உலகக் குழு தலைவரான சஞ்சீவகுமார சமரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் மரணம் தொடர்பில் சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு சந்தேக தகவலொன்றை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படுகொலை சம்பவத்துடன் சிறைச்சாலை திணைக்கள பணியாளர்களுக்கு தொடர்பு உண்டா என அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த அமைப்பின் சேனக பெரேரா இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
குறித்த சந்தேக நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டு வரும் நிலையில் எதற்காக அவரை நீதிமன்றத்தில் நேரில் முன்னிலைப்படுத்த வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை சஞ்சீவ என்பவருக்கு அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகிய தரப்புகள் தெரிவித்துள்ளன.
சிறைச்சாலைக்குள் எவருக்கும் ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த சந்தேக நபர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்த படுகொலையுடன் சிறைச்சாலை திணைக்கள பணியாளர்களுக்கு எவ்வாறான தொடர்பு உண்டு என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக பூசா சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவை பாதுகாக்க 12 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறப்பு படை அதிகாரிகள் கடமையில் இருந்துள்ளனர்.
தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பாதுகாப்பு குறைபாடு காரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடந்ததா என ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவிடம் பல தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிமன்றத்திற்குள் நுழையும் அனைத்து நபர்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் ஆனால் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டது.
இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்திக் கொண்டு கொலையாளிகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதற்கமைய, எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கனேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் “கணேமுல்ல சஞ்சீவ” துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி புத்தளம் நோக்கி தப்பிச் செல்ல பயன்படுத்திய வேனின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.