ஆப்பிள் தனது திறமையான ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள எடுத்த முடிவு!

உலகின் தலைசிறந்த டெக் நிறுவனமான ஆப்பிள், தற்போது பெரும் தலைவலியை எதிர்கொண்டு வருகிறது. அதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது, ஊழியர்கள் தங்கள் நிறுவன வேலையை உதறிவிட்டு, டெக் ஜாம்பவானான மெட்டா (Facebook) நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது தான்.

வேலையாட்கள் போனால் என்ன என்று நினைக்கும் அளவிற்கு, ஆப்பிள் (APPLE) நிறுவனத்தில் இருந்து மெட்டாவுக்கு தாவியவர்கள் சாதாரண ஊழியர்கள் அல்ல. அனைவரும் உலகின் தலைசிறந்த பொறியாளர்கள் என்று கூறப்படுகிறது. தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய இவர்களை, பிற நிறுவனங்கள் அபகரித்து செல்வதை ஆப்பிள் நிறுவனத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எப்படியாவது திறமையான ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என அதிரடி நடவடிக்கையில் ஆப்பிள் இறங்கியுள்ளது. அதன் முதல் பகுதியாக தற்போது திறமையான ஊழியர்களுக்கு வெகுமதியை (Bonus) அறிவித்துள்ளது. அதுவும், பணமாக அல்ல. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் மூலம் போனஸ் வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில், போட்டிகளை எதிர்கொள்ள இதுவே சரியான முடிவு என ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. போனஸ் எவ்வளவு என்றால் நீங்களே அதிர்ந்து விடுவீர்கள். திறமையை பொருத்து போனஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. 50ஆயிரம் அமெரிக்க டாலர்களில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.37,40,000 - அதாவது 37லட்சத்து 40ஆயிரம் ரூபாய்) தொடங்கி 1,80,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,34,64,000 - அதாவது ஒரு கோடியே 34லட்சத்து 64ஆயிரம் ரூபாய்) அமெரிக்க டாலர்கள் வரை மதிப்பிலான பங்குகள் வெகுமதியாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு சில நிபந்தனைகளையும் ஆப்பிள் நிறுவனம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தது நான்காண்டு காலமாவது ஆப்பிள் நிறுவனத்தில் வெகுமதி பெற்றவர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. மூன்று ட்ரில்லியன் டாலர் ஆப்பிள் நிறுவன பங்குகள் இந்தாண்டு மட்டும் 36% விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை கையாண்டு வரும் மெட்டா நிறுவனம், மெய்நிகர் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் பெரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த தலைமுறையை வழிநடத்தும் இத்தகைய தொழில்நுட்பங்களை உள்வாங்கி, தொடர்ந்து முன்னேறும் டெக் நிறுவனமே வரும் காலங்களில் நிலைபெறும்.

அதற்கேற்ப மெட்டா நிறுவனமும், வெற்றிகரமாக பயணித்து வரும் நிறுவனங்களிடம் இருந்து தலைசிறந்த திறமையான ஊழியர்களை கவர நினைக்கிறது. அதனை சரிசெய்ய டெக் நிறுவனங்கள் சிலிக்கான் வேலியில் படாதபாடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.