இந்திய விஜயத்தோடு சீனா செல்லும் அநுர


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayak), தனது இந்திய விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், தமது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

அதன் பின்னர், அடுத்த மாத ஆரம்பத்தில் அவர், சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது முதலீடுகளை ஈர்த்தல், இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு என்பனவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்;பட்டுள்ளது.

இந்திய முதலீட்டுத் திட்டங்கள்

இந்தநிலையில், புதுடெல்லியில் இரண்டு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடந்து வருவதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவி;த்துள்ளார்.

குறிப்பாக மின்சாரத் துறையில், இந்திய முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் டிசம்பர் 16 திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் 

ஜனாதிபதியுடன் செல்லவுள்ள தூதுக்குழுவை அரசாங்கம் தற்போது தயார் செய்து கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயம் அடுத்த மாத ஆரம்பத்தில் இடம்பெறும் போது, கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

சீன நிதியுதவி வழங்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்தும் இந்த விஜயத்தின் போது விவாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.