விடுதலைப் புலிகளுக்கு அநுர செய்து கொடுத்த சத்தியம்! சபையில் கடும் சர்ச்சை

Lதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் டயஸ்போராவிற்கும் அளித்த வாக்குறுதிகள் படி, அரசாங்கம் செயற்படுவதாக மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் டயஸ்போராவிற்கும் அளித்த வாக்குறுதிகளை மறக்கவில்லை.

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் கைதும் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் படியே இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்த ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் சிறையில் உள்ளார்.

உலகின் வேறு எந்த நாடும் அவர்களுக்காக கடமையாற்றும் இராணுவ வீரர்களையும் கடற்படையினரையும் அவமதிப்பதில்லை. 

அது இங்கு மட்டுமே நடக்கின்றது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் சென்று முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக வாக்குமூலம் வழங்குமாறு கூறுகின்றனர்.

குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நீதிமன்றத்திற்கு சென்று தன்னை முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக வாக்குமூலம் வழங்குமாறு கட்டாயப்படுத்துகின்றார்கள் என கூறியுள்ளார்.

இது அனைத்தும் விடுதலைப் புலிகளின் டயஸ்போராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.