தமிழர் பகுதியிலுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை மண்டபத்தில் ஏற்பட்ட குளறுபடியால் சர்ச்சை

தற்போது நாடளாவிய ரீதியில் சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியில் நேற்றுமுன்தினம்(18.03.2025) தமிழ் பாட பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பரீட்சை மண்டபத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இதனால் மண்டப இலக்கம் ஒன்றில் பரீட்சைக்குத் தோற்றிய 150 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய பகுதி பாட வினாத்தாளுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிவடைய ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் இருந்தும் விடைத்தாள்கள் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளமையால் இந்த குழப்ப நிலை ஏற்படடுள்ளது.

வினாத்தாள்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தை மட்டுப்படுத்தி ஒரு மணித்தியாலமும் நாற்பது நிமிடங்கள் கால அவகாசம் இருந்தும் அவை மறுக்கப்பட்டு விடைத்தாள்களை பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய மேற்பார்வையாளர்களால் பெறப்பட்டுள்ளது.

முழுமையாக புள்ளிகள்

இதனால் மாணவர்கள் முழுமையாக பரீட்சை வினாக்களுக்கு விடையளிக்க தவறியுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இரண்டு பரீட்சை மண்டபங்களில் பரீட்சைகள் நடைபெற்ற போதிலும் ஒரு மண்டபத்திலேயே இவ்வாறு அநீதி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தங்களது புள்ளிகள் மற்றும் பெறுபேறுகள் குறைவடையலாம் என்றும் தமிழ் மொழி பாடமானது மிக முக்கியமானது என்றும் தங்களது எதிர்காலம் இதனால் பாதிப்படையலாம் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளதோடு, இதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் மாணவர்களது பெற்றோரும் கோரியுள்ளனர்.