இலங்கையை நேற்றிரவு உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி சூடு : சிறுமி பரிதாபமாக பலி


குருநாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் மகுலகம பகுதியில் நேற்று இரவு (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில்   பெண்ணும் ஒருவரும்  சிறுமியும் காயமடைந்து குளியாப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சிறுமி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஹெட்டிபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

உயிரிழந்த சிறுமி 9 வயதுடையவர் என்றும், ஹெட்டிபொல, மகுலகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மகுலகமவில் பகுதியில் பன்றிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே 9 வயதான குறித்த சிறுமி உயிரிழந்தாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அதே பகுதியை சேர்ந்த 48 வயதான நபர், நேற்றிரவு தப்பிச் சென்றிருந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து  துப்பாக்கி மற்றும் இரண்டு வெற்று குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 
காயமடைந்த பெண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்த சிறுமியின் சடலம் குளியாபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.