காலி, அம்பலாங்கொடை இடம்தோட்டை பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சந்தேக நபர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கம்பஹா - வெலிவேரிய மற்றும் காலி - அக்மீமன பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக 8 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, காலி – அக்மீமன பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலைகள் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், 26 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார்.
அதேநேரம், கம்பஹா - வெலிவேரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழுக்களின் தலைவரான கெஹேல்பத்தர பத்மகேவுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்