இந்த ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல், 35 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான முன்னைய அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட யோசனையை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அந்த திட்டம் அங்கீகரிக்கப்படாமையால், அது முன்னெடுக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அதிகாரம் உள்ளதா என அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா, ஒஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஓமன், போலந்து, கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் விடயத்திலேயே இந்த பிரச்சினை எதிர்கொள்ளப்படுகிறது.
எனினும் சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய ஏழு நாடுகளும் இலவச விசாக்களுக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்தன.
எனவே அந்த நாடுகள் தொடர்ந்து இலவச விசாவிற்கு தகுதி பெறுகின்றன.