பிரபல பாதாள உலக குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திட்டமிடலில், இலங்கையில் வசிக்கும் மற்றொரு நபர், செயற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டத்தரணி போல் வேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பெண்ணையும் இந்த நபரே வழிநடத்தியிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
படுகொலை நடந்தபோது நீதிமன்ற வளாகத்தில் இருந்த அடையாளம் காணப்பட்ட சிறப்புப் படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் மொத்தம் 13 கைப்பேசிகள் விசாரணைக் குழுக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த தொலைபேசிகள் தற்போது மேலதிக விசாரணைக்காக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் முன்னிலையானமை குறித்தும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தப்பிச் செல்ல சந்தேக நபர் பயன்படுத்திய வேன், மேலதிக விசாரணைக்காக அரச ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வேனின் இயந்திர எண், ஜெசி எண் மற்றும் உரிமத் தகடுகள் ஆகியவை போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வேனின் உரிமையாளர் என்று நம்பப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேனை அவருக்கு வழங்கியவர், மற்றொரு பொலிஸ் அதிகாரி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த அதிகாரி தற்போது டுபாயில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகரின் பாதுகாப்பில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் இந்தக் கொலையைச் செய்தாரா என்பது குறித்து எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருக்க, அன்றைய தினம் நீதிமன்றத்தின் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் சந்தேக நபரின் முகத்தை அடையாளம் காண சிறப்பு பரிசோதனை நடத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலதிகமாக சந்தேக நபரின் கைரேகைகள் மற்றும் டி.என்.ஏ.க்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும், பொலிஸ் விசாரணைகளுக்கு அப்பால் வெளியில் உள்ள நிபுணர்களிடமிருந்தும் ஆதாரங்கள் பெறப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சந்தேக நபர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரை அடையாளம் காண போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம், துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான ஆதாரமாக அன்றைய தினம் சந்தேக நபர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி இருப்பதாகவும், மேலதிகமாக அவர் அகற்றப்பட்ட இடத்திலிருந்து அன்று அவர் அணிந்திருந்த ஆடைகள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் புத்திக மனதுங்க தெரிவித்திருந்தார்.
கொலைக்கு முன்னர் சந்தேக நபர் தங்கியிருந்த தங்குமிடத்திலிருந்து ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காணொளிகள், தற்போது போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் காட்சிகள் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.