தேர்தல் திகதி நிர்ணயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு - நிமல் ஜி. புஞ்சிஹேவா


தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்தது.

ஆனால், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, திகதி நிர்ணயம் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் உள்ளிட்ட உரிய தரப்பினருடன் கலந்தாலோசித்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இதன்படி அடுத்த வாரம் முதல் சில நாட்களில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அதன் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும்  குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம் மூலம் 2023 தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து, நிதி அமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

பிரிதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு அனுமதியளித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பி்டத்தக்கது.